லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

கலக்கல் கபாலி – 4

"நாய் கடிக்குமாப்பா? பொண்டுகள் ஜோரா ஆம்லட் போட்டுண்டே பம்பரம் விடற எடத்தில எல்லாம் ஊசியப் போட்டு நாற அடிச்சிடுவாளே?"

குரல் வந்த திக்கில் எல்லோரும் பார்த்தார்கள்.

அவசர அவசரமாக கிளாஸ் டம்ளர்கள் ஹை ஸ்பீடில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன. பீடிகள் கருக்கப்பட்டன. மண்ணடி மாந்தர் குதித்தெழுந்து விண்ணென்று விறைத்து நின்றனர். அழுக்கு பனியனில் மண்ணைத் தட்டி விட்டுக்கொண்டு, கர்சீப்பைக் கழுத்திலிருந்து எடுத்து இடுப்பில் செருகியபடி கபாலி எழுந்து நின்றான்.

தலிவனே எயுந்து நின்றிருப்பதால் ஆஸ்தானமே மகா மரியாதையுடன் நின்றிருந்தது என்பது நம் புத்திசாலி வாசகர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வந்திருக்கும் மகாவித்வானின் மகத்துவம் அப்படி.

பாத்ரூம் பாகவதர் மந்தைவெளிப் பிரசித்தம். பெயர்க் காரணம் பற்றிப் பத்தி பத்தியாக எழுதலாம். ஹிண்டுவும் விகடனும் காலம் காலமாக எழுதி எழுதிக் களைத்து விட்டார்கள். இப்போது நமக்கு அதையெல்லாம் நினைவு படுத்த அவகாசம் இல்லை. ஒரு கானடாவையோ காங்கேயபூசணியையோ அவர் பாத்ரூமில் பாட ஆரம்பித்தாரென்றால் சென்னைக் குழாய்களில் கூட கிருஷ்ணா நதி நீர் பிரவாகமாக ஓடுமென்பது ஐதீகம்.

பாடகர் மட்டுமல்ல, பௌராணிகர். அவர் கதை விட ஆரம்பித்தால், மன்னிக்கவும், கதை சொல்ல ஆரம்பித்தால் சார்ஸ் கிருமி வாயில் போனது கூடத் தெரியாமல் சீனாவில் கேட்பார்களாம். 

"நீங்க எதுக்குங்க இம்மாந் தொலவு? ஒரு கொரல் உட்ருந்திங்கன்னா நானே  ஓடியாந்திருப்பனே?" 

பாத்ரூம் பாகவதர் ஒரு சேஃப்டிக்காக மணியிடமிருந்து இன்னமும் தள்ளியே நின்றிருந்தார். பருத்த தொந்தியை மறைக்க முயன்ற வெள்ளை ஜரிகை வேஷ்டியும் அங்கவஸ்திரமும் தோற்றுக் கொண்டிருந்தன.. கழுத்தில் தங்கச் செயினுடன் உத்ராட்சக் கொட்டைகள், கலர் கலர் மணிகளில் ஏதேதோ மணி மாலைகள். நெற்றியில் சந்தனப் பொட்டு, தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடியுடம் பாகவதர் அந்தக் காலத்து ராஜபார்ட் ஆள் மாதிரி ஜம்மென்று தான் இருந்தார்.

"ஒரு அவசரமான ஜோலிங்கறதுனால தான் நானே வந்தேன் கபாலி"

குறிப்பறிந்த சபை மகா ஜனங்கள் புரிந்து கொண்டு அவரவர் வேலையைப் பார்ப்பது  போல் காதை மட்டும் தீட்டிக்கொண்டு வேறு திசையில் பார்க்கலானார்கள். ஆதிமந்தி  பேப்பரில் மூழ்கினார். முன்சாமி கழுத்தை வளைத்துக் கடைசிப் பக்கத்தைப் படிக்க முயன்றான். கபாலி கைலியை உதறிக் கீழே விட்டுக் கொண்டு பாத்ரூமிடம் சற்றே நெருங்கி வந்தான்.

"இன்னா சார், ஒயிட் ஹார்சு அதுக்குள்ளாரவா ஆயிப் போச்சு?"

"இல்லைடா கபாலி. இது வேற மேட்டர். சி ஐ டி காலனியில் என் மச்சினி வீடு  இருக்கோல்லியோ, அங்க ஒரு பிரச்னை".

"அங்கன இருக்கறவங்க அத்தினி பேருக்குமே இப்ப சனிப் பெயச்சில நேரம் சரியில்ல சார். இந்தப் பொண்ணு பாருங்க எப்டிக் கஷ்டப்பட்டு, குட்டிக்கரணம் போடற கொரங்கு கமலையெல்லாம் கட்டிப்புடிச்சி, கானா பாடி, அம்மா பூட்டாங்கன்னு அமெரிக்காவுல அயுது பொறண்டு கிறண்டு துட்டு பாத்த காசு, கார்ப்பரேசன்காரன் கடப்பாறயக் கொணாந்து 'ட்ங்கு டங்கு'னு இடிக்கறான். உங்க மச்சினிச்சி அங்க எடம் வாங்கிக்கறாங்களா? துட்டெல்லாம் சிரிதெவி கரெக்டாதான் குட்துகிறாங்களாம், ஆனாக்க அது போவுற எட்துக்குப் போவுலயாம். அதாம் பிரச்னை"

"அய்யோ கபாலி. இது வேற மேட்டர். ஸ்ரீதேவி கதையை அங்கேயே விட்ரு. சோனி  கபூர் பாத்துப்பன்.  என் மச்சினி ஆமும் அதே தெருவில தான் இருக்கு. அவுட் ஹவுசில கூட யாரையோ சொந்தம்னு சொல்லி ஒரு கட்சிக்காரனைக் கொண்டு வந்து நீ கொடக்கூலிக்கு வெச்சியே போன வருஷம், நோக்கு மறந்துடுத்தா?". 

கபாலிக்குச் சாதாரணமாக இதெல்லாம் மறப்பதில்லை. ஆனால் இன்று சரியானபடி சுதி ஏறுவதற்குள் பாகவதர் வந்து நின்று கண்ணாடி டம்ளர் மண்ணுக்குள் புதைபடும்படி  ஆகிப்போனது. நெற்றியைச் சுருக்கிக் கையால் தேய்த்து நினைவு படுத்திப் பார்த்தான். திரி திரியாக அழுக்குடன் ஞாபகமும் வந்தது.

"அக்காங், ஆரு சார், அந்தக் கரை வேட்டிக்காரனா? ஒயுங்காத்தானே இருக்கறதாச்  சொன்னீங்க ஒரு தபா?"

"ஒழுங்காத்தான் இருந்தான் ஒரு மூணு மாசம். அவனுக்கு ஏதோ பதவி பறி  போய்டுத்தாம். அதிலருந்து ஒரே கரைச்சல். வாடகை கொடுக்கறதில்லை, காலி பண்ணவும் மாட்டேங்கறானாம். கேட்டாக்க ஆட்டோவுல ஆள் அனுப்புவேங்கறானாம்"

"அப்டியா! தலிமைக் கயகத்தில துட்டு ரொம்ப சுட்டுட்டான்னு தூக்கிக் கடாசிட்டாங்க.  அதுக்கு உங்க கிட்ட மோதறானா? சரி, இப்ப என்ன பண்ணணும் அவன, அத்தச் சொல்லு சார். சொந்தமாவது, மண்ணாங்கட்டியாவது?"

"அவனை ஒடனே காலி பண்ண வைக்கணும். என்ன செலவானாலும் …"

"சார், இந்த வார்த்த உன் வாய்லேருந்து வர்லாமா? உன் கிட்ட நான் துட்டு வாங்குவனா? எனுக்கு நீ குரு மொறை. அப்பப்ப பாட்டு சொல்லித் தர சங்கராபரணம் சாஸ்திரி. துட்டு வோணாம்"

சைட் ஷோவாக இதை ஜாடையில் கவனித்தாலும், கூட்ட நண்பர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ். துட்டு இல்லாமல் சென்னையில் தூரல் கூட விழ மாட்டெனென்கிறது. எப்படிக் கபாலி இதை சமாளிப்பான்?

"துட்டு வோணாம், அந்தத் துண்ட மட்டும் குடு சார். காரியம் முடிஞ்சிதுன்னு நெனச்சிக்க. நாளைக்குக் காலைல இந்நேரம் அவன் காலி பண்ணிருப்பான்."

அப்பேர்ப்பட்ட அவதார புருஷன் கண்ணனிடம் கூட நம்பிக்கை இல்லாமல் அர்ஜுனன் ஆயிரம் கேள்வி கேட்டு அழிச்சாட்டியம் பண்ணினான். கார்முகில் வண்ணனிடம் கார்கில் மாதிரிச் சொதப்பினான். அவரும் ஆயிரக் கணக்கில் ஹரிதாஸ் மாதிரி நிறுத்தாமல் பொறுமையாகப் பாடி அர்ஜுனனை கன்வின்ஸ் பண்ணினார். அது வரைக்கும் போர் எங்கும் போகாமல் நின்று கொண்டிருந்தது. அதெல்லாம் பழைய கீதை. அஜீத்துக்கும் விஜய்க்கும்  இதெல்லாம் தெரியுமா என்ன? புதிய கீதை என்று காதில் பூ சுற்றுவார்கள்.

ஆனால், ஒரு கேள்வி கேட்காமல், சாம, தான, பேத, தண்டத்தில் இது என்ன உபாயம், எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை, ஒரு கட்சிக்காரக் கரைவேட்டியையே காலி பண்ணவைக்கிற பெரும் சாலெஞ்சை சிட்டியில் இவ்வளவு சீக்கிரம் சாதிப்பாய், ஆட்டோவில் நீயே போய் ஆளைப் போட்டுத் தள்ளுவாயா, அமிலம் அடிப்பாயா  என்றெல்லாம் எதுவும் கேட்காமல், நிம்மதியான புன்னகையுடன்  பாத்ரூம் பாகவதர் 

தன் அங்கவஸ்திரத்தைச் சுருட்டிப் பந்தாகக் கபாலியிடம் வீசினார். அவனும் அதைக் கேட்ச் பிடித்தான். 

'இதனை இதனால் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று தாடிக்காரர் முதல் பீட்டர் டிரெக்கர், கேரி பெக்கர் என்று மேனேஜ்மெண்ட் வல்லுனர் எல்லோர் சொல்லுவதும் இதே, இதே!

முன்சாமி, ஆதிமந்தி, பீட்டர், பக்கிரி அனைவரும் சுறுசுறுப்பாகக் கை தட்டினர்.

பாத்ரூம் நிம்மதியாக அபௌட் டர்ன் அடித்தார்.  'என்ன தவம் செய்தனை' என்று  ஆரம்பித்தபடியே ராயர் காப்பி கிளப்பில் ராமராயர் கையால் ஒரு டிகிரிக் காப்பி  அடிக்கலாமென்று தீர்க்கமான முடிவுடன் கிளம்பினார்.

ஆங்காங்கே ரத்தினம் பட்டணம் பொடிக்கறையுடன் சுகந்த பரிமளம் வீசிய அங்கவஸ்திரத்தைச்  சின்னப் பந்தாகச் சுருட்டியபடி கிளம்பிய கபாலி இந்தப் பெரிய காரியத்தை எப்படி முடிப்பான் என்பது பற்றிய கலந்துரையாடல் எட்டாம் நம்பர் கடையில் ஆர்வத்துடன் ஆரம்பமானது.

கடமையே ஐயாகக் கபாலி அங்கிருந்து ஜுட் விட்டான்.

Leave a Comment

Spam Protection by WP-SpamFree