கலக்கல் கபாலி – 5
"ஆதௌ கீர்த்தனா ரம்பத்திலே, ரகு குல வம்ச திலகன், ஏகபத்தினி விரதனான பகவான் ராமனாகப்பட்டவன், பர ஸ்திரிகளை லுக் விடவே விடாத பகவான் ராமன், …" பாத்ரூம் அன்று மாலை மந்தவெளி கல்யாண நகர் அசோசியேஷன் கூட்டத்தில் உரக்க முழங்கிக் கொண்டிருந்தார். சுமாரான கூட்டம்.
'அண்ணமலை' ராதிகாவுக்கு என்ன ஆச்சு? டிராக்கே இப்படி மாறிப் போயிடுத்தே? 'அப்பா' ஏன் ஆரம்ப முதலே இப்படி மொண்ணை ப்ளேடாய் அறுத்துத் தொலைக்கிறது? 'அன்பு மன'த்தில் என்ன சொத்துத் தகராறு என்று எழுதினவருக்காவது தெரியாமா?' போன்ற அன்றாட சீரியல் கவலைகளில் மூழ்கி, வழக்கமாக வரும் மாமிகள் கூட்டம் கணிசமாகக் குறைந்திருந்தது.
அநேகமாக எல்லா மைலாப்பூர், மந்தைவெளி மாமிகளுமே தொல்லைக் காட்சிகளில் மூழ்கி அழுது கண் காது வீங்கி மூக்கைச் சிந்திக்கொண்டிருப்பதால் யாரும் சுண்டல் விநியோகத்திற்குக் கூட எதுவும் கொண்டு வரவில்லை. சுண்டலுக்காக மட்டுமே அலை மோதி வரும் நொச்சிக்குப்பம் வாசிகளையும் அதனால் அதிகமாகக் காணவில்லை. ஆங்காங்கே மாசக் கடைசியில் 'கட்டிங்'குக்குக் கூட காசில்லாத குடிமகன்களே
கும்பல் கும்பலாகக் குழுமியிருந்தனர்.
பாத்ரூம் பாகவதர் யோசித்தார். இன்று தட்டில் ஒன்றுமே கலெக்ஷன் தேறாது என்பது தெரிந்து விட்டது. வெறும் தேங்காய மூடிக கச்சேரிகளால் கொலஸ்ட்ரால் தான் எகிறித் தொலைக்கிறது. கோல்டு ரோலக்சை ஸ்டைலாகப் பார்த்தார். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சீக்கிரமாகவே ரம்பத்தை முடித்து விடலாம் என்று முடிவெடுத்து கதையை முடிக்கலானார்.
"அப்பல்லாம் ஸ்தீரிகள் இப்ப மாதிரி இல்லை. கல்யாணத்துக்கு மின்னாடி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறது கூட அவ்வளவா வழக்கமில்லை. 'புள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா?'ன்னு த்ரிஷா மாதிரிக் கொழந்தைகள் சிரிச்சுண்டு வழியமாட்டா. ஆம்பளைகளும் மகா கௌரவமாத்தான் இருந்தா. சாமி பாக்கப் போனமா வந்தமான்னு சமத்தா இருந்தாளே தவிர, 'சகுனம் பாத்து சடங்கு பாத்து சிரிச்சு சிறுக்கி
நீன்னெல்லாம் அபஜருத்து மாதிரிப் பொம்மனாட்டிகள் தொப்புளப் பாத்துப் பாடமாட்டா' என்றார்.
'சாமி' பேர் கேட்டதும் புண்ணியம் தேடி வந்த கூட்டம் விலுக்கென்று விழித்துக் கொண்டது. ஆங்காங்கே விசில் சப்தங்கள் எழும்பின. பரவாயில்லையே, முழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்' என்று பாத்ரூமும் கொஞ்சம் குஷியானார். ஃபிடில்கார நாயுடுவைப் பார்த்துச் சிரித்தார்.
"அயோத்தி ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்."
"அப்பயுமே ரெண்டெழுத்து தான் ஃபேஷனா? தூள் மச்சி" என்று ஒரு மப்புக் குரல் எழும்பியது.
"இன்னாது, ஒரே ஜொள்ளா? த பார்ரா"
"ராமன் இன்னா கெய போல்ட்டா, ஒரே ஒரு பல்லுன்ற?" என்றது இன்னொரு விகாரக் குரல்.
"அடேய் மூதேவிகளா! ஒரே ஒரு பல்லும் இல்லை, ஒரே ஜொள்ளுமில்லை. ஏகப்பட்ட பத்னி இல்லாம ஒரே ஒரு பொண்டாட்டி, ஒரே ஒரு வில்லு, ஒரே ஒரு பாணம் போட்டாலே எதிராளி அவுட்டுன்னு அர்த்தம். இதைத்தான் தியாகராஜர் எப்படிச் சொல்றார்னா …"என்று ஹார்மோனியத்தின் சத்தத்தை பாத்ரூம் அதிகப்படுத்தினார். கூட்டம் ஏடாகூடமாகும்போது ஒரு பாட்டை எடுத்து விட்டால் அது பயந்து போய்க்
கட்டுக்கடங்குமென்பது பல வருட அனுபவம்.
'ஒக மாட ஒக பாணமு ஒக பத்நீ…" என்று திடீரென்று ஹரிகாம்போஜியில் அவர் ஆரம்பித்தார். காம்போஜி நேற்றைய பஜ்ஜி மாதிரி காஞ்சம் வழுக்கிக்கொண்டு பிசிறடித்தது. இதை எதிர்பாராமல் வழக்கமான பல்லவி ஏதாவது பாடுவார் என்று பக்கவாத்தியக்காரர் கன்னையா ஆதி தாளத்தில் ஆரம்பிக்க பாத்ரூம் கடுப்பானார்.
"ரூபகம்டா மூதேவி. ஆதி தாளத்துல மோளமாட்டம் தட்டி என் பிராணனை வாங்காத. ஏற்கனவே கூட்டம் அசத்தாயிருக்கு. நீ வேற உசிர வாங்கற" என்று சீறினார்.
"சாரிண்ணா. மாத்திடறேன்" என்று கன்னையா தாளக் கட்டை அவசரமாக மாற்றிக் கொண்டவாறே யோசித்தார். 'ஏன் இப்படி திடீரென்று எரிந்து விழுகிறார்? கூட்டம் கம்மிதான். ஆனால் இந்தக் கூட்டம் கேக்கற கேள்வியெல்லாம் மாமாவுக்கு ஜுஜுபி. இதுக்கெல்லாம் அசர மாட்டாரே. மூடு அவுட் ஆகறதுக்கு வேற என்ன காரணம்?" ரூபகத்தை லாகவாகப் பிடித்தவாறே சுற்றுமுற்றும் பார்த்தார் கன்னையா.
மஞ்சள் ஈகிள் ஃப்ளாஸ்க் மேடையோரமாக அநாதையாக நின்று கொண்டிருந்தது. ஓஹோ! கன்னையாவிற்குக் காரணம் புரிந்து போயிற்று. பின்பாட்டை அவசரமாக ஆரம்பித்துக் கொண்டிருந்த மங்களம் மாமியிடம் மைக்கில் கேட்காதவாறு, 'மாமி, ஃப்ளாஸ்க். மறந்துட்டேள், அங்கயே இருக்கு பாருங்கோ' என்றார்.
குறிப்பறிந்த மங்களமும் ஓடிப்போய ஃப்ளாஸ்க்கை எடுத்துவந்து பாத்ரூம் பக்கமாக வைத்தாள். பாத்ரூம் புன்னகைத்தார். "ஒகசித்தமுகலவாடே' என்று ஆரோக்கியமாக பாத்ரூம் மேலெழும்பினார். ஹரிகாம்போஜியை அப்படியே அந்தரத்தில் சற்று நேரம் சர்க்கஸ் மாதிரி நிறுத்தி விட்டு அசால்ட்டாக அங்கவஸ்திரத்தை எடுத்துப் போர்த்திக் காள்வது போல் ஒரு உதறு உதறி அப்படியே ஃப்ளாஸ்கிலிருந்து திரவ பதார்த்தத்தை
ஒரு கல்ப் அடித்தார்.
உடனே பிரமாதமாக ஸ்ருதி சேர்ந்து பாட்டு மேலே சஞ்சரித்தது. கூட்டம் பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடந்தது. எழுந்திருந்த மப்பர்கள் அத்தனை பேரும் அப்படியே அவர் பாட்டில் சுருண்டு விழுந்தார்கள்.
அதாவது, ஒரே ஒரு வெள்ளைக்கார கிராக்கியைத் தவிர.
செம்பட்டைத் தலையும், காவியில் ஜோல்னாப் பையும் அழுக்கு வேஷ்டியும் விபூதி ருத்ராட்சமுமாக அந்த வெள்ளைக்காரன் ஒரே ஒரு விரலை மாட்டும் தூக்கிக் காட்டியபடி எழுந்து நின்றான்.
முதலில் அவனை பாகவதர் சரியாகப் பார்க்கவில்லை. 'ஒகநாடுநு மறவகவே' என்று எங்கேயோ போனவர் கீழே இறங்கி வரும்போது தான் அவனைப் பார்த்தார்.
'யாரிந்த அபிஷ்டு? மூச்சா வந்தால் எழுந்து ஓரமாய்ப் போய்த் தொலைக்க வேண்டியது தானே? ஏன் பெர்மிஷன் கேட்டு அப்ளிகேஷன் போட்டு நிற்கிறான்?' பாத்ரூம் யோசித்தபடி கமகத்தில் கலக்கினார். இன்னமும் அவன் நின்றபடியே தான் இருந்தான். கூட்டமும் எழுந்து நின்றிருக்கும் அவனையே பார்த்தபடி ஆச்சரியமாக யோசித்திருந்தது.
"ஒற்றை விரல் நீட்டி நின்றால் அமெரிக்காவுல அதற்கு அர்த்தமே வேற" என்று சென்ற மாதம் நியு ஜெர்சியிலிருந்து வந்திருந்த கசின் ஸ்வாமிநாதன் சொல்லியிருந்தது சடாரென்று ஞாபகம் வந்தது பாத்ரூமுக்கு. 'இதென்னடா கஷ்டம்' என்று அங்கவஸ்திரத்தால் போர்த்திக் கொள்ளாமலேயே கவலையுடன் ஃப்ளாஸ்கிலிருந்து இன்னொரு லார்ஜ் மிடறு விழுங்கினார்.
'தேவுடே த்யாகராஜநுதடே' என்று பாட்டைச் சீக்கிரம் முடித்தார்.
கூட்டம் சஸ்பென்சுடன் அந்த வெள்ளைக்காரனையும் அவரையுமே பார்த்தது.
"Yes? What do you want? You may go"
"Swamiji, I have a doubt"
ஓஹோ, இது இதிகாச புராணங்களிலே சந்தேகம்னு கேட்டுத் தெளியற ஹரே கிருஷ்ணா கேசா?
பாத்ரூம் பாகவதரின் பௌராணிகப் பிரவசனம் இது வரை ஆங்கிலத்தில் நடந்ததில்லை என்பதால் கூட்டம் சற்றே ஆச்சரியம் கலந்த அலம்பலுடன் கலகலத்தது.
"வெள்ளக்காரனுக்கு என்னவோ டவுட்டாம். அத்த மொதல்ல க்ளியர் பண்ணு அய்ரே, அப்பால மேல போவலாம், ரைட்டுன்றான்" என்ற அவசர மொழிமாற்றம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதாகவே தெரிந்தது.
வாயைத் திறக்காமல் கையையும் காலையும் ஃபிடில் நாயுடு உதற ஆரம்பித்ததும் பாத்ரூம் கொஞ்சம் யோசனை செய்தார். மைக்கை ஆஃப் பண்ணி விட்டு மேடையில் ஒரு சின்னக் கலந்துரையாடல் நடந்தது.
"அவனும் குடிச்சிருப்பானோ?"- இது மங்களம்.
"ஆளு ஒசரமா சேப்பா இருக்கானே தவிர, இவன்லாம் பஞ்சத்தில் அடிபட்ட பனாதைப் பிசுநாறின்னா. இவனால பத்து பைசாவுக்கு பிரயோசனம் கிடையாது. இவன் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கணும்னாக்க கன்னிமாரா போகட்டும். நீங்க வேலயப் பாருங்கோ. அடுத்தாப்ல என்ன பாடப்போறேள்னு மட்டும் இப்பவே சொல்லிட்டா நான் ரெடியா இருப்பேன்" என்றார் கன்னையா.
வாய் நிறையப் புகையிலை இருந்ததால் ஃபிடில்காரர் என்ன நினைத்தார் என்பது நல்லவேளையாக யாருக்கும் தெரியாமலே போயிற்று.
பாத்ரூம் புன்னகைத்தார். தன் ஜமாவைப் பார்த்துக் கை அமர்த்தினார். சம்ஸதானச் சக்கரவர்த்தி தன்னை நாடி வரும் புலவனிடம், "வேண்டிய வரம் கேள் அப்பனே" என்பது போல் அந்த வெள்ளைக்காரனைப் பார்த்து ஒரு மந்தகாசச் சிரிப்புடன், "Let me know your doubt. I will clear any doubt, any time" என்றார்.
வழக்கமாக வெள்ளைக்காரர்களுக்கு எங்கே டவுட் வரும் என்பது பாத்ரூமுக்கா தெரியாது? தசரதனுக்கு எப்படி 60,000 ஒய்ஃப்ஸ் பாசிபிள் என்பார்கள். வாலியை ஏன் மறைந்திருந்து அடித்தான் ராகவன் என்பார்கள். ராமன் ஆரியனா திராவிடனா என்பார்கள். அல்லது ஓரளவு படித்திருந்த விஷய ஞானிகள் நாராயணனின் அவதார தாத்பர்யம் பற்றி சமத்காரமாகக் கேட்பார்கள்.
எதுவாயிருந்தாலும் பரவாயில்லை.
கேள்வி கேட்பவனின் சாதுர்யத்தால் தான் குருவே ஞானியாகிறான் என்கிறார் சங்கரர். இந்த வெள்ளைக்காரன் அப்படி என்ன கேட்டு விட முடியும்? அதையே தமிழிலும் சம்ஸ்கிருததிலும் கலந்து உல்டாவாக்கி ஒரு குன்சாகச் சொல்லி ஒரு பாட்டையும் போட்டு விட்டால் கூட்டம் குஷியாகும். குஷியான கூட்டம் கணக்குப் பார்க்காமல் தட்டில் துட்டு கொட்டும். இன்று உருப்படியாக ஏதாவது தேறி விடும்.
மங்களமும் ரொம்ப நாளாகத் தங்க மாளிகையில் ஏதோ வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
"Don't hesitate. Be brave. Any doubt. Whatsover. In whatever Ramayana kandam. கேளுங்கோ"
அந்த வெள்ளைக்காரனும் கூட்டத்தையும் பாத்ரூமையும் பார்த்துப் புன்னகைத்தான். எங்கே பிறந்து எங்கே வளர்ந்து எங்கே கஞ்சா அடித்து எப்படி இங்கே வந்து சேர்ந்தவனோ? கூட்டமும் அவனை ஆதுரத்துடன் பார்த்துக் கை ஆட்டியது.
"தொர, கேளு. கேட்டதும் கொடுப்பவனே கிஸ்னா, கிஸ்னா, கீதையின் நாயகனே" என்று ஒரு பாட்டு கரண கொடூரமாக ஆரம்பித்தது.
"அது விஜய்டா, கிஸ்னன் கெடியாது"
"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், யேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்" என்று ஒரு டும்மிங்குப்பவாசி ஆரம்பிக்க "டேய், இன்னாடா இங்கன வந்து ரவுசு காட்ற, மவனே" என்று எதிர்க்குரல் ஒன்று எழுந்தது.
பாத்ரூம் வெள்ளைக்காரனைப் பார்த்து "I am an authority on Ramayana, Bhagavatha, Vedas and Upanishads too. Ask any doubt" என்றார்.
அந்த வெள்ளைக்காரன், "When is the last bus 23-C leaving?" என்றான்.
சமீபத்திய பின்னூட்டங்கள்