லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!
RSS Feed

கலக்கல் கபாலி – 6

"துட்டு வோணாம், அந்தத் துண்ட மட்டும் குடு சார். காரியம் முடிஞ்சிதுன்னு நெனச்சிக்க. நாளைக்குக் காலைல இந்நேரம் அவன் காலி பண்ணிருப்பான்." என்று கடமையே கண்ணாகக் கபாலி, பாகவதரின் சி ஐ டி காலனி மச்சினி வீட்டுப் பக்கம் சம்பூர்ண ராமாயண நடிகர் திலக பரதன் மாதிரி லொங்கு லொங்கென்று நடந்து ஜுட் விட்டது நினைவிருக்கிறதல்லவா? 

காட்டுக்குப் போய் விட்ட ராமண்ணாவிடம் அவரை விடாமல் துரத்திக்கொண்டே போய் அவர் போட்டுக்கொண்டிருந்த கிழிந்த டயர் செருப்பைத் தம்பி பரதன் லோனாகக் கேட்டான்.

சீதா மன்னி அப்போது பரதனிடம் என்ன சொன்னாள்? 

"சின்ன மச்சினரே, அவர் சைஸ் என்ன, உம் சைஸ் என்ன? உமக்கு அது ஃபிட் ஆகுமா?  அப்படியே ஆனாலும், திரும்பிப் போகும்போது செருப்பு உம் காலைக் கடித்தால் என்ன செய்வீர்? காட்டில் விளக்கெண்ணெய் கிடைக்காதே? இந்த நாட்டில் அண்ணாவாகப் பிறந்தாலே இப்படித்தான். எல்லோருமாகச் சேர்ந்து ஏற்கனவே அண்ணாவுக்குப் பெரிய நாமமாகப் போட்டு விட்டீர்கள். கையில் துட்டு, க்ரெடிட் கார்டு ஏதும் இல்லாவிட்டாலும் மனுஷன் ஏதோ ஞாபகமறதியாகக் காலில் செருப்பு மட்டுமாவது போட்டுக்கொண்டு வந்திருக்கிறார். நீர் அதையும் 'பாதுகையே துணையாகும்' என்று ஏதோ ஒரு  பாட்டைப்பாடி லவட்டிக்கொண்டு போகப் பார்க்கிறீர். இது தகுமா? இவர் காலில் முள் குத்தி செப்டிக் ஆனால், 'எண்ணெய் காய்ச்சி உப்பை நனைத்துக் காலில் வைத்து  ஒத்தடம் குடு' என்று ஏதாவது பாட்டி வைத்தியம் செய்யச் சொல்வார். 

நடுக்காட்டில் உப்புக்கு எங்கே போவேன்? கடைசியில் எல்லாவற்றுக்கும் என் பிராணன்தானே போகிறது?" 

சீதாலட்சுமிப் பிராட்டி அப்படித்தான் சொன்னாளாம். 

அதிபர் புஷ் வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் திருப்பூர் துண்டு போட்டுத் தாண்டி இதை உறுதிப்படுத்துகிறார்.  Weapons of Mass Destruction ஈராக்கில் எக்கச்சக்கமாக  இருப்பதைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்ன அமெரிக்க எம்பெட்டட் ஜர்னலிஸ்ட் வட்டாரங்கள் இதை பலமாக ஆமோதிக்கின்றன. 

பரதன் அண்ணாவின் செருப்புகளோடு அபௌவுட் டர்ன் அடித்துத் திரும்பிப் போன  கதையை அங்கேயே விட்டு விடுவோம். அதெல்லாம் பெரிய ராமாயணம். பாத்ரூம்  பாகவதரின் ஸ்பெஷாலிட்டி. 

ஆனாலும், ஒரு கேள்வி. அந்தச் செருப்புகள் என்ன ஆயின? 

குதுப் மினார்ின் கீழே அவை இப்போதும் பத்திரமாக இருப்பதாக நாஸ்ட்ரடாமசின்  ரகசியக் குறிப்பொன்று சொல்வதைக் காவிக் கட்சியினர் உடனே கவனிக்க வேண்டும். கவனித்தால், அடுத்த எலெக்ஷன் பற்றியெல்லாம் ஜெர்மனியில் போய் அடித்துக்கொண்டு இந்திய மானத்தை வாங்காமல் அத்வானியா வாஜபேயரா என்கிற வழக்கமான  பல்லவியைப் பிசிரில்லாமல் காலம் பூராவும் உள்ளூரிலேயே  பாடிக் கொண்டிருக்கலாம்.

விஷயத்துக்கு வருவோம்.

கபாலி, பாத்ரூம் பாகவதரின் பொடி மண சுகந்த அங்கவஸ்திரத்தைத் தலைப்பாகையாகச் சுற்றிய வண்ணம் பீமண்ண முதலி கார்டன் வழியே குறுக்கு வழியில் நடந்தான். காலைக் கதிரவனின் ஆதுரமான 110 டிகிரிக் கிரணங்கள் அவன் பிடரியை வருடிக் கொடுத்து சந்தோஷப் படுத்தின. கார்ப்பரேஷன் கல்யாண சத்திரத்தில் 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி?' ஜம்மென்று முழங்கிக் கொண்டிருந்தது.

ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் கார்னரில், பழைய கமல் வீட்டருகில் நின்று சற்றே பல் குத்தியபடி கபாலி பராக்குப் பார்த்தான். 'கமலைப் பார்த்தால் இந்த சண்டியர்-கௌதமி மேட்டர் பற்றிக் கேட்கவெண்டும்' என்று மனசுக்குள் குறித்துக்கொண்டான். 

'சாம்கோ'வை ஒட்டிய பெட்டிக் கடையில் ஒரு கட்டு கணேசு செலவில் அவன்  சிந்தனைக் குதிரை அதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. 

மலைப்பான விஷயம். பரம் பைசா வேண்டாம் என்று அசால்ட்டாக பாத்ரூம் பாகவதரிடம் உதார் விட்டாயிற்று. செய்யவேண்டிய காரியமோ குரு முகாந்திரமான அதி தீவிர  கட்டைப் பஞ்சாயத்து மேட்டர். நெப்போலியன், விஜயகாந்த் போன்ற சாமான்னிய ஜமக்காளங்களால் பேசித் தீர்த்து வைக்க முடியாதது. அதுவும் ஒரே நாளில் காரியத்தை முடித்துப் வாடகைப் ப்ராபர்டியை வேகண்ட் பொசெஷன் தருவதாக குருவிடமே வாக்குக் கொடுத்தாயிற்று. 

எப்படி முடிப்பான்? 

எதிர் பார்ட்டியோ பிரதிவாதி பயங்கர கட்சிப் பார்ட்டி.  தகராறு என்று வந்து விட்டால் எதிராளியை அவன் திருப்பாச்சியால் கீசுவானா, இல்லை கொத்துப் பரோட்டா போட்டுக் கைமா செய்வானா, சொல்ல முடியாது. காலையில் வாக்கிங் போய்விட்டு வரும்போதே போட்டுத் தள்ளினாலும் தள்ளுவான். அப்புறம் அண்ணா, தம்பி என்றெல்லாம் யார்  அலறினாலும் போன உயிர் திரும்ப வருமா? உடன்பிறப்பே, உயிருக்குயிரே என்று 

என்னதான் உடான்ஸ் விட்டாலும் போன உயிர் போனது தானே? மாநாடு மாதிரிக் கூட்டம் வந்தால் கூட ஒரு இரங்கல் தீர்மானத்துக்குகூட் நாதி இல்லாமல் போய்விடுமே.

பாசம் பலமானது.

மேலேயிருந்து ஆள் பலமோ. பண பலமோ.ஆசீர்வாத பலமோ இல்லாவிட்டால் என்னதான் நடக்க முடியும்? சூட்கேஸ் பலமிருந்தால் ஜட்ஜ்மெண்டையே கூட் நிறுத்தி வைக்கலாம். பாவம், கபாலி. பரம ஏழை. பலத்துக்கு என்ன செய்வான்? 

திடீரென்று அவன் மண்டையில் ஒரு பல்ப் பளீரிட்டது.

"த பார்ரா. இத்த யோசிக்காம வெத்தாப் பூட்டமே" என்று கபாலி பிரகாசமானான்.

அவசர அவசரமாக ஆழ்வார்பேட்டை பெட்ரோல் பங்கின் பின்புறமாகப் போய், பங்க்ச்சர் ஒட்ட வைத்திருந்த வாளித் தண்ணீரை மொண்டு மொண்டு குளித்தான். அழுக்கும் சோம்பலும் போய் மனதில் சுறுசுறுப்பு பொங்கியது. அப்படியே ஈரத் துணியுடன் லஸ் பக்கம் திரும்பி, கோவாப்பரேடிவ் பாங்க் ஆஞ்சநேயர் சன்னிதியில் போய் அமர்ந்தான். 

கூட்டமில்லாத காலை நேரம்.

கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு கவலையால் தவித்த தோஸ்து இல்லையா அவர்? உதவாமலா போய் விடுவார்? 'உம் பலம் உமக்கே தெரியாதப்பா, நீ பெரிய எம்டன்' என்று ஜாம்பவான் இப்படி ஏதோ ஏத்தி, சுத்தி விட்டதை நம்பிப் பாவம் அந்த மாருதி என்ன பாடு பட்டார்? பறந்து போய் இலங்கையில் இறங்கியதுமே எத்தனை கவலைப்பட்டார்? 

இலங்கை என்றாலே எப்போதும் கப்பல் கவிழ்கிற கவலைக்குறிய மேட்டர் தான் போலும். அந்த ஊரில் மட்டும் அமைதிப்புறாக்கள் கூட அடி மடியில் குண்டு கட்டியபடியே பறக்கின்றன. பாவம். 

கவலையிலிருந்து மீண்டு காரியத்தை மாருதி சாதித்தது எப்படி?

சுந்தர காண்டத்தில் பனிரெண்டாவது ஸர்க்கத்தில் "என்ன புத்தி மோசம் போனேன்?  கவலை உயிரை வாங்குமே; காரியங்களைக் கெடுக்குமே; ஸகல ஸம்பத்திற்கும்  உத்ஸாஹமல்லவா காரணம்; உத்ஸாகமே சிரேஷ்டமான சுகத்தைக் கொடுக்கும். எந்தக் காரியத்தையும் செய்யும்படி மனிதனைத் தூண்டி விடுகிறது உத்ஸாஹமல்லவா?' ஹனுமார் சீரியசாக யோசித்துத் தனக்குத்தானே உற்சாகம் ஏற்படுத்திக்கொண்ட

கதையை பாத்ரூம் குருநாதர் விலாவாரியாகச்  சொல்லியிருக்கிறாரே.

கபாலி கண் மூடி தியானத்தில் இறங்கினான். 

தில்லாங் ராகத்தில் பாகவதர் சொல்லிக் கொடுத்திருந்த 'பஜ பஜ மானஸ  ராகவேந்திரம்…' அடி மனதில் ஓட ஆரம்பித்தது.

ஒரு தேவதையை இஷ்ட தேவதையாக நினைத்துக் கொண்டாட ஆரம்பித்தால் கையில்  துட்டு சேர்ந்தவுடன் பால் மாறிக் கழட்டி விடக்கூடாது. ராகவேந்திர்ர பெயரைச் சொல்லிக் காலம் காலமாகக் கையில் போட்டுக்கொண்டிருந்த செப்பு வளையத்தைக் கழற்றிக் கடாசியதனாலன்றோ 'பாபா' ஊத்தப்பமாய் ஊத்திக்கொண்டது? தலைவரைக் காப்பியடித்து லட்சக் கணக்கில் ரசிக மகா ஜனங்களும் கேனத்தனமாக வாங்கி 

வாங்கி மாட்டிக் கொண்டிருந்த சிவப்புச் செப்பு வளையங்களெல்லாம் திகைத்துப்போய் அநாதையாய் ஆணிகளிலலவா ஊஞ்சாலாடிக் கொண்டிருக்கின்றன இப்போது? செம்பு விலை என்னாவது?

யாரோ ஒரு பெரியவர் கபாலியைச் சற்று நேரம் பார்த்தபடி நின்றார். செருப்பு  பார்த்துக்கொள்கிற புது சொங்கிய்ா, இல்லை வெறும் ஈரப் பிச்சைக்காரனா இவன் என்று யோசித்தபடி ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைப் பாதி வடையுடன் அவன் கையில் போட்டார்.

உத்தரவு வந்து விட்டதென்று மகிழ்ந்து கண் விழித்து எழுந்தான் கபாலி. ஆஞ்சநேயருக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு சி ஐ டி காலனிக்குள் உற்சாகத்துடன் விசிலடித்தபடி எண்ட்ரி கொடுத்தான்.

Leave a Comment

Spam Protection by WP-SpamFree