கலக்கல் கபாலி – 9
பாவம். பாத்ரூம் பாகவதரை வெகு நேரமாக அந்த மந்தவெளி கல்யாண நகர் அசோசியேஷன் கச்சேரியிலேயே நிறுத்தி- மன்னிக்கவும், உட்கார்த்தி- வைத்து விட்டோம். ஜோல்னாப்பை, செம்பட்டைத்தலை சகிதம் அந்த வெள்ளைக்காரன் அல்லவா ஒரு விரல் நீட்டியபடி நின்று கொண்டிருந்தான்?
என்ன செய்வது? நாட்டில் அதிமுக்கியமான விஷயங்கள் அசுர கதியில் அல்லவா அரங்கேறிக் கொண்டிருக்கின்றன? வாரம் ஒரு முறையே சரித்திரம் படைக்க நேரமிருக்கும் என் போன்ற எழுத்துக் காவலர்கள் படும் கண்டின்யூடி கஷ்டம் ரசிக வாசகராகிய உங்களுக்குப் புரிகிறதோ? கிட்டத்தட்ட சோனியா படும் அதே ரணம், கஷ்டம். 'உஷ்!' என்று இங்கே அடக்கி வைத்தால் அங்கே புட்டுக் கொள்கிறது.
வடக்கே ஏதாவது சூட்கேஸில் வாய்க்கரிசி போட்டு அமுக்கி வைத்தால் தெற்கே அடிதடியில் சத்தியமூர்த்தி பவனே ரத்தக் களரியாகி விடுகிறது. ஆட்டோக்கள் பறக்கின்றன. சென்னையில் யாரையாவது கிள்ளி விட்டால் அத்தனை பேரும் ப்ளேனில் கூட்டமாகப் பறந்து போய் சோனியா வீட்டு வாசலில் "அடிக்கறான் பாருங்கம்மா. இவனைப் பெஞ்சு மேல ஏத்துங்க" என்று கோஷ்டி கானம். வாரம் நாலு தடவையாவது
அத்தனை பேரும் டெல்லிக்குப் பறந்து சென்று சாயா குடித்து விட்டு இங்கே வந்து அறிக்கை விட எப்படிக் கட்டுபடியாகிறது? இத்தனை கலாட்டாவில் கடைசியில் காமராஜருக்கு நூற்றாண்டு விழா நடந்ததா இல்லையா? பாவம், அவர்.
சரித்திரம் புனைந்து ஈமெயிலில் நான் வார காவியம் அனுப்புவதற்குள் இன்னொரு செரீனா பூகம்பம் எங்கேயாவது புறப்பட்டு விடுகிறது. சிதம்பர பகவானுக்கே எல்லாம் வெளிச்சம். சிதம்பரம் என்றாலே எல்லாம் ரகசியம் தானே?
நமக்கெதற்கு வம்பு? நான் ஏதாவது உண்மையை இயம்பப்போய் என் கைக்குட்டைக்குள் 100 கிலோ கஞ்சாவை ஒளித்து வைத்திருந்ததாக யாராவது பிடித்து விடப்போகிறார்கள்! இந்த கஞ்சா டெக்னிக் எல்லாம் ரொம்ப போர் அடிக்கவில்லை? புதிதாக எக்ஸ்டஸி, எபிட்யூரால் என்று ஏதாவது லேட்டஸ்டாகவாவது சொல்லக் கூடாதா?
என்னவோ புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்கப்போகிறான் என்று எல்லோரும் நினைக்க, அந்த செம்பட்டை வெள்ளைக்காரனோ ஒரு விரல் காட்டியபடி "When is the last bus 23-C leaving?" என்றல்லவா நக்கலாகக் கேட்டான்?
கூட்டம் 'ஹோ'வென்று சிரிப்பாய்ச் சிரித்தது. மங்களம் கூட தலைப்பால் வாயை மூடியபடி மந்தகாச நாணத்துடன் சிரித்தாள். தான் சிரித்தால் சபையே நாறிச் சாற்றில் ஊறி விடுமென்றறிந்த மிருதங்கிஸ்ட் புகையிலையைத் துப்பும் சாக்கில் எழுந்து சைடாக வீடு கட்டினார். ஃபிடில் கன்னையா நாயுடுவோ, "அண்ணா, ஒரு நிமிஷம்" என்று விரலை ஒரு முறை காட்டி விட்டு, அந்த நேரத்தில் அந்த விரல் அபத்தத்தின் ஆபத்தையும் உடனே உணர்ந்து, மேடையின் பின் பக்கமாக ரிவர்சில் ஓடிப்போய் சிரிப்பை அடக்க முடியாமல் துப்பலானார்.
பாகவதருக்கு ஏகக் கடுப்பாகி விட்டது.
நாள் தவறாமல் தினதோறும் தடம் புரளும் இண்டியன் ரயில்வேயாய்க் கதையும் தடம் புரண்டு இந்தப் பாவியால் எங்கேயோ போய் விட்டது. யார் சொல்வதையும் கேட்காமல் கூட்டமோ லைபீரியாவாய் அலை பாய்ந்து திரிகிறது. ஆஃப்கானிஸ்தானைக் கையில் வைத்துக்கொண்டு இப்போது என்ன பண்ணித் தொலைப்பது, சுட்டுத் தொலைக்கிறதே என்று புஷ் முழிக்கிற மாதிரி பாகவதரும் பேய்முழி முழித்தார்
மஞ்சள் ஃப்ளாஸ்க்கில் திரவ பதார்த்தம் ஆல்மோஸ்ட் ஒரே ஒரு சொட்டு மட்டுமே மீதமிருந்ததும் அவர் கோபத்துக்கு ஒரு அடிஷனல் காரணமென்பர் அவரை நன்கறிந்த சிஷ்ய கேடிகள்..
ஆனாலும், எதிராளியைக் 'காச் மூச்'சென்று பப்ளிக் கூட்டத்தில் அபத்தமாய்த் திட்டி அசிங்கமாய்க் கோபித்து வேட்டியைத் தூக்கி தொடையைத் தட்டிச் சபதம் போட்டால் தாயுள்ளம் கொண்டவர்கள் வேண்டுமானால் மன் மகிழ்ந்து ஆசீர்வாதம் பண்ணிப் பண முடிப்பும் பதவியும் வாரியமும் பரிசாய்க் கொடுக்கலாம். ஆனால் இங்கே உட்கார்ந்திருக்கும் டும்மிங், நொச்சிக்குப்பவாசிகளிடமிருந்து துட்டு பெயராது என்று
பாகவத்ரின் அந்தராத்மா அவரை எச்சரித்தது.
'அவசர உத்தரவாய் ரூட்டை மாற்ற வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார்.
'எஸ்மாவாவது டெஸ்மாவாவது? அரசு இயந்திரத்தையே ஸ்தம்பிக்க வைத்து விடலாம், என்று தான் சூரத்தனமாக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் எதிர்பாராமல் அம்மா போட்ட அசுர இடியால் 'போங்கடா வீட்டிற்குப் பொடாவே தேவலை' என்றல்லவா கடைசியில் ஆகி விடுகிறது?
இதைத்தான் 'அசோசியேஷன் ப்ரபோசஸ், அம்மா டிஸ்மிசஸ்' என்று அலம்பலாக ஆங்கிலத்திலே சொல்கிறார்கள். பாகவதரும் இங்கே நூதனமான முறையில் இந்த வம்படிக் கேசை டிஸ்போஸ் பண்ணலானார்.
எப்படி?
இருந்த கடைசிச் சொட்டையும் உறிஞ்சிக் காலி பண்ணிய பாத்ரூம், இன்னமும் நின்று கொண்டிருந்த வெள்ளைக்காரனைப் பார்த்தப்டி, இருவிரல்களையும் வாய்க்குள் விட்டுப் பளீரென்று ஒரு விசில் அடித்தார். விசிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம், ஏன், எதற்கு என்றெல்லாம் யாரும் கேட்டு விடக்கூடாது. அசுரனையே அழகனென்றால் தான் 'அட' என்று எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள். எல்லாமே ஒரு ஷாக் வால்யு தான்.
பாத்ரூமின் விசில் சத்தத்தில் கூட்டம் காது கிழிந்து உறைந்து பயந்து நின்றது. ஒரு கை சொடக்கில் எத்தனையோ லட்சோபலட்சம் பேரை அவரவர் வீட்டுக்கே பார்சலாய் அனுப்ப முடியுமென்றால், ஆனானப்பட்ட சுப்ரீம் கோர்ட்டே 'ஏதாவது போட்டுக் குடுங்கம்மா, பாவம்மா, ப்ளீஸ், தாயே' என்று கெஞ்ச முடியுமென்றால், நம் தாய்த் திரு நாட்டில் ஒரு விசில் சத்தத்தில் அத்தனை கூட்டத்தையும் அப்படியே பயமுறுத்த
முடியாதா, என்ன? முடிந்தது.
மொத்தக் கூட்டத்தின் கவனத்தையும் தன் பால திருப்பி விட்ட பாத்ரூம் மேடையின் பின் பக்கம் திரும்பி எம்ஜிஎம் சிங்கம் மாதிரி ஒரு உறுமல் உறுமினார். அடுத்த கணத்தில் பக்க வாத்திய சகாக்கள் அவரவர் இடங்களில் ஆஜராகி இருந்தனர்.
வெள்ளைக்காரன் மட்டும் ஒன்றும் புரியாமல் கன்னத்தைச் சொறிந்து கொண்டு நின்றான்.
பாகவதர் ஒரு தடவை தொண்டையைக் கனைத்துக் கொண்டார். பிறகு ஓங்கிய குரலில் அமர்க்களமாகப் பாட ஆரம்பித்தார். 'மிஸ்ரசாபுவா, கண்டசாபுவா, என்ன எழவுடா இது?' என்று ஒரு கணம் மயங்கிய கன்னையா சுதாரித்துக்கொண்டு, வில்லால் இரண்டு தடவை தலையில் அடித்துக்கொண்டு, அவசரமாக ஃபிடிலில் திருப்பிக் கொஞ்ச ஆரம்பித்தார்.
'இச்சுத்தா இச்சுத்தா, கன்னத்தில் இச்சுத்தா'
'பிச்சுத்தா பிச்சுத்தா காசிருந்தா பிச்சுத்தா' -மங்களமும் பின் பாட்டில் சேர்ந்து
கொண்டதில் பாத்ரூமுக்குக் குஷி அதிகமாய்ப் பிய்த்துக்கொண்டது.
'திட்டம் போட்டுத் திருடுற கொள்ளைக்காரா
கட்டம் கட்டிக் கவுக்கறெ வெள்ளைக்காரா'
என்னைக் கொல்ல உன்னைப் பெத்தா உன் ஆத்தா
என் அடிவயத்தக் கடையிற கடையிற ஓர் மத்தா'
'டண்டணக்கா, டண்டணக்கா" மிருதங்க முத்தையாவின் தாளம் தொடர்ந்தது.
"நெத்திப்பொட்டு வெச்சிக்கின வெள்ளக்காரா – நீ
திட்டம் போட்டுக் கவுக்கிறெ ரொம்ப ஜோரா"
பாத்ரூமும் மங்களமும் பாடப்பாட கூட்டம் தாளம் போட்டு ஆடியது.
'பஞ்சு முட்டாய் கசக்குது கசக்குது
மூட்டைப்பூச்சி கடிக்குது கடிக்குது
கலெக்ஷன் தட்டும் காத்துல பறக்குது
ஏன்னு தெரியாதா ஓ ஹோ ஹோ ஹோ
திராட்ச ரசமும் எரியுது எரியுது
கோலி சோடாவும் எம்ப்டியா கீது
ஊறுகாயும் தொட்டுக்க லேது
ஏன்னு புரியாதா?'
வெள்ளைக்காரனும் என்ன பாடுகிறார்கள் என்று புரியாமலேயே சந்தோஷமாக ஆட ஆரம்பித்தான். மேற்படி எங்கேயோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட மதுரை ஸ்பெஷல் கஞ்சா அவன் மூளையில் சில கிராம்கள் மிச்சமிருந்து அவனை ஆடோ ஆடென்று ஆட வைத்தது.
ராமாயண கதா காலட்சேபத்திற்கும் 'இச்சுத்தா இச்சுத்தா'விற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் மனத்தடியில் மறந்தும் கூட நினைக்கவில்லை. இருந்தாலும் சாமர்த்தியமாக இரண்டையும் கொண்டுவந்து அழகாக முடிச்சுப்போட்டு நிறுத்தினார் பாத்ரூம்.
பாட்டை திடுமென்று நிறுத்தி வசனத்தில் இறங்கினார்:
"பொண்டுகள் எப்பவுமே அப்படித்தான். கட்டை விரலால கோலம் போட்டபடி நாணிக் கோணிண்டு, கண்ணைச் சுழட்டிச் சுழட்டி 'இச்சுத்தா இச்சுத்தா'ன்னு கொஞ்சிக் கொஞ்சி மல்லிகைப் பூவாட்டம் விஷமமாப் பாடுவா. அதை நம்பி 'ஹி ஹி'ன்னு இளிச்சிண்டு ஆம்பளைகள் அங்க ஈஷிண்டு போனாக்க 'இச்சு' தரேன்னுட்டுக் கடைசில 'itch' கொடுத்தனுப்பிடுவா. நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். அதனால தான்
அந்த அயோத்தி ராமன் 'ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி'ன்னு ஏகபத்னி விரதனா இருந்தான். என்ன நான் சொல்றது எல்லாருக்கும் புரியறதா?"
கூட்டம் பாகவதரின் சமத்காரத்தைப் பார்த்து ஆர்ப்பரித்தது.
'குரு' என்று வெள்ளைக்காரன் ஓட்டமாக ஓடி வந்து பாத்ரூம் முன்னால் நின்றபடி தன் சட்டை, பைஜாமா, ஜோல்னாப் பைகளில் இருந்த எல்லாவற்றையும் அள்ளி அள்ளி அவர் முன்னால் இருந்த பாத்திரத்தில் போட ஆரம்பித்தான். உருத்திராட்சம், சங்கிலி என்று எல்லாவற்றையுமே அவன் எடுத்துத் தன் பரமானந்த குருவுக்கு சமர்ப்பணம் செய்து அவர் காலிலே விழுந்து கிடப்பதையும் கண்ட கூட்டம் சிலிர்த்துப் போயிற்று.
எல்லோரும் அவரவர் சட்டை, வேட்டி, அரை டிராயர், ஜாக்கெட், கைலி இடுக்குகளில் ஒளித்து வைத்திருந்த சொந்த, பிக்பாக்கெட் அடித்த, கடன் வாங்கிய அனைத்துப் பணங்களையும் பாத்ரூம் மகா குருவுக்குக் காணிக்கையாகச் செலுத்த ஆரம்பித்தனர்.
தட்டு நிரம்பி வழியலாயிற்று. புதுப் பச்சை டாலர் நோட்டுக்களுடன் பல காலமாய்க் குளிக்காத அழுக்கு ரூபாய் நோட்டுகளும் கலந்து உறவாடின. 'கலங் கலங்'கென்ற சில்லறைச் சத்தம் மேடையிலிருந்த எல்லோர் காதிலும் பால் வார்த்தது.
பாத்ரூம் பாகவதர் கண்களில் நீர் துளிர்த்தது. 'செம கலெக்ஷன்' என்று நினைத்துக் கொண்டார். 'சற்றுப் பெரிய மாங்காய் டிசைனேயே வாங்கிக் கொள்ளலாம்' என்று மங்களாம் நினைத்துப் பூரித்தாள். "அண்ணா, ரேஷன் அரிசிக்குக் கொஞ்சம் அட்வான்ஸ் …" என்று கன்னையா செகண்ட் ஃபிடில் போட ஆரம்பித்தார். பாகவதரைச் சுற்றிலும் ஜனங்கள் 'மடேர் மடேர்' என்று அவர் காலில் விழும் சப்தத்துடன் ஜால்ரா
சப்தங்களும் சேர்ந்து இசைக்க ஆரம்பித்தன.
"நம்ப ஆளு பெர்ய குர்ஜிப்பா. வெள்ளக்காரனே கால்ல உய்ந்து சிஸ்யனாய்ட்டான். வெள்ளக்காரன் வெள்ளக்காரன் தான். பெரிய எம்டன்பா"
"மவனே, இவுரு செத்தா கண்டிக்கு சமாதிய பீச்சில தான்யா வைக்கோணும். அதும் அண்ணா, எம்சியாரு பக்கத்திலயே தான் இவுரயும் பொதைக்கோணும். நீ இன்னான்ற?" என்றது இன்னொரு ப்ரிய சிஸ்யன்.
"கபாலீஸ்வரா, எல்லாம் உன் கருணை" என்று மைலாப்பூர் கபாலியை பாத்ரூம் நன்றியுடன் வேண்டிக் கொண்டாலும், மெய்லாப்பூர் தோஸ்து கபாலி என்ன செய்கிறானோ, சொன்னபடி மறு நாள் காலை மச்சினி வீட்டு மேட்டரை முடித்து விடுவானோ என்ற கவலையும் அவருக்கு லேசாக வராமலில்லை.
சமீபத்திய பின்னூட்டங்கள்