கலக்கல் கபாலி – 12
பாத்ரூம் பாகவதரின் ஏக வசன புளகாங்கித கீர்த்தி மகிமையைச் சென்ற வாரம் நுணுக்கமாக விவரித்திருந்தோம். அன்பு மிகுதியால், ஆனந்தத் தாண்டவத்தடுமாற்றத்தால், குருவானவர் தன் பிரதம சிஷ்ய கேடியை ஆலிங்கனம் செய்து கொண்டு உதிர்த்த நல்முத்துக்கள் அந்த மந்தவெளிப் பிராந்தியம் முழுவதிலுமே ஒரு பெரும் சலசலப்பு ஏற்படுத்தியதை விலாவாரியாகச் சொல்லியிருந்தோம்.
அதைப் படிக்கும்போதே தமக்கு ஏற்பட்ட ரோமாஞ்சனப் புல்லரிப்பு, உணர்ச்சிக் கொந்தளிப்பு, ஆச்சரியப் பரபரப்பு போன்ற அணுக்கமான விபரங்களையும் பல வாசகர்கள் எமக்குத் தனி மெயிலில் விவரித்தெழுதி மகிழ்ந்திருக்கின்றனர். அடுத்த படத்துக்காக இக்காவியத்தின் திரை உரிமை கோரி இயக்குனர்கள் எமக்கு எழுதிக் கெஞ்சுகிறார்கள். ஹாலிவுட் ஏஜெண்டுகளும் படையெடுத்துச் சொறிந்த வண்ணம் தொ(ல்)லைபேசி வருகிறார்கள். ம்ம்ம்.பார்க்கலாம்.
'திருவிளையாடல்' படத்தில் 'பாட்டும் நானே, பாவமும் நானே' என்றொரு பாடல் வரும். டிஎம்எஸ் அப்போதெல்லாம் பிரமாதமாகப் பாடுவார். பாத்ரூம் ஃபினாயிலை எடுத்து சோடா சேர்க்காமல் 'ரா'வாகக் குடித்து விட்டு 'அய்யோ எரியுதே, அப்பா வலிக்குதே' என்கிற சொந்த சாகித்தியக் கூத்தெல்லாம் அப்போது கிடையாது. இந்த 'பிர்கா'வெல்லாம் பிற்காலச் சேர்க்கை.
'எதிலும் இயங்கும் இன்னிசை நானே, என்னிசை நின்றால் அடங்கும் உலகே' என்று சிவாஜிக்காக அவர் பாடி முடித்ததும், ஆடுகின்ற தென்னை மரங்கள் அப்படியே கலிஃபோர்னிய கவர்னர் க்ரே டேவிஸ் மாதிரி அதே ஜாடையில் ஜடமாய் நிற்கும். எழும்பிய அலைகள் கூட, ஷ்வார்சநெகரைக் கண்டதும் அவர் பயத்தில் உறைந்தாரே, அதே மாதிரி ஃப்ரீஸ் ஃப்ரேமாகும்.
எல்லாமே ஒரு கணம் தான். டிஎம்எஸ் மறுபடியும் 'நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே' என்றதும் உலகம் மறுபடி ஒரு சகஜ நிலைக்கு வரும். அதே மாதிரி மந்தைவெளி மாக்களும், "ஒண்ணுமில்லய்யா. நேத்திக்கு வாத்யாரு வசனம் எழுதின 'பாய்ஸ்' படம் பாத்திருப்பாரு பாகவதரு. அதனால இப்டி. வேலையப் பாருங்கப்பா" என்று தத்தம் அத்யாவசிய வேலைகளில்-பல் குத்தல்ஸ், கய்க பால்டிக்ஸ், நோட்டீஸ்
கிழிச்சல்ஸ், ரோட்டோர மூச்சாஸ்- மூழ்கலானார்கள்.
பாகவத குருவின் வார்த்தைகளைக் கபாலி பெரும் பாராட்டாக எடுத்துக் கொண்டான். பீட்டரும், முன்சாமியும் கைதட்டி ஆர்ப்பரித்து "அப்படிச் சொல்லய்ரே" என்றனர். சமயோசிதமாக மணியும் 'லொள்' என்று ஒரு முறை குரைத்துப் பாகவத குருவின் கணுக்காலை ஆசாரமாக, மேலோட்டமாக, நக்கியது. தமிழ்ப் புலவர் ஆதிமந்தி "ஒன்றே சொன்னீர், அஃதும் நன்றே சொன்னீர். மானுடம் வென்றதம்மா. ஆருளர் அய்யா உம்போல் அய்யரிவ்வுலகம் தன்னில்' என்று கவிதை பாடினார்.
'பதவி வரும்போது பணிவு வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா' என்று பாடினார் பட்டுக்கோட்டையார். எல்லோருக்கும் புரியக்கூடிய நல்ல தமிழ் தான். 'லாலாக்கு டோல் டப்பி மா' போன்ற செந்தமிழ் கிடையாது. பணிவும், துணிவும் பாமரன் கபாலி கூட புரிந்து கொள்ளக்கூடிய சுளுவு டமில் தான். இந்தப் பாட்டுக்குப் பதவுரை எழுதிய பரிமேலழகர், 'பதவியெனில் யாங்கு அது பாராட்டாம். படையென்று
சான்றோர் பகர்கின் அஃதாங்கே ரத, கஜ, துரக, பதாதியென்னுமாப் போலே, உட்கருத்தால், பதவியென்னுங்கால் இஃதாங்கே பாராட்டும் உள் தொக்கித் தொனிப்பதை நுண்ணுணர்ந்து சீர் தூக்கின் பாராட்டும் பதவியுமென்பது துணிபு. மற்றாங்கே …' என்று பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல், பழைய புத்தகக் கடைக்காரர்கள் ஆனந்தக் கூத்தாடும் வகையில் எழுதியிருக்கிறார்.
பதவி மட்டுமல்ல, பாராட்டு வரும்போதும் பணிவு வரவேண்டும். அன்பர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். பண்பு வேறு, பணிவு வேறு. துணிபு வேறு. துணிவு வேறு. துண்டு போட்டுத் தாண்டக் கூடத் துணிவில்லாதவர்கள் எத்தனையோ பேர். ஆனால் சிலருக்குக் கழுத்தில் துண்டு போட்டிழுத்துக் கடாசும் துணிச்சல் அதிகம். இன்னும் சிலருக்கோ துணிவு மிக மிக அதிகமென்பதே ஆராய்ச்சியாளர்களின் துணிபு.
துணிவு என்றால் சாதாரணத் துணிச்சலா? "கருப்பு ஆனையைத் தானமாக அன்று நான் கொடுத்தேன் அக் கோவிலுக்கு. அது என் விருப்பு. ஆனால் என்னையே தானமாகக் கொடுக்க நீ விரும்புவதாக அன்று சொன்னாயாமேயடா. அடேய், அற்பப் பதரே, அய்ரே, கசமாலம், வாய் இருப்பதால்தானே வைதாய், பேப்பர் இருந்ததால் தானே பேத்தினாய். இன்று, இப்போது, என் படை முன், இங்கே அதைச் சொல்,
பார்க்கலாம். சொன்னால் கையோ, காலோ. சட்டையோ, வேட்டியோ மிஞ்சுமா?' என்று அம்மா சமீபத்தில் ஆவேசமாக முழங்கியதையோ, அதன் காரணமாக அய்யரொருவர் ரத்தக் களறியாகி மயிலாடுதுறைப் பழங்காவேரிப் பக்கமாய் அழுதபடி உடைந்து நொறுங்கிய ஆஃபீஸ் சாமான்களைக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதையோ பற்றி நாம் இங்கே நுண்ணுணரத் தேவையில்லை. நம் கதையோ பெருங்கதை. காங்கிரசும் காட்டா குஸ்தியும் கூட பாரம்பரியம் மிக்கவையே. துடைத்துக்கொண்டு போய் விடுவார்கள் அடுத்த தேர்தலுக்குள்.
பதவிக்கு நாம் ஆசைப்பட வேண்டாம். நமக்கு இங்கே தேவை பாராட்டு மட்டுமே.
ஆனால் வெறும் பாராட்டு, வெத்துக் கலைமாமணிக்குச் சமம். நசுங்கின தாமிரப் பட்டயத்தை ஷெல்ஃபில் வைத்தால் கொசு முட்டையிடும். குளவி கூடு கட்டும். சிலந்தி வலை பின்னும். வேறு யாருக்கு லாபம்? பிசாத்துப் பதினைந்தாயிர ரொக்கமும் கமிஷனெல்லாம் போக மீதிக் கையிருப்பாய் வருகையில் கடலை மிட்டாய் வாங்கக் கூடக் காணாது. பாகவதர் இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்ததனால், வெறும்
பாராட்டோடு நிற்காமல், அடி மடியிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டையும் எடுத்துக் கபாலியின் கைலி மடியில் போட்டார். தாமிரப் பட்டயத்துக்குப் பதிலாக ஒரு தாயத்தை இடுப்பிலிருந்து உருவிக் கபாலியில் வலது புஜத்தில் கட்டி விட்டார். "காபாலிகா, நீ ஏற்கனவே அஜாத சத்ரு, இனிமே அராஜக புத்ரன்" என்று ஆசீர்வதித்தார். கூடி இருந்த கூட்டமும் 'அண்ணன் அரைச்ச புத்தரன் வாய்க"
என்று கெக்கலித்தது.
"நீ எப்படி அந்த வீட்டை சாமர்த்தியமா கைப்பத்தினேங்கற விஷயம் என் காதுல விழுந்துது. புஷ்ஷுக்கு நீ ஆலோசகனாப் போயிருந்தா அவன் ஈராக்குல எல்லாரையும் கொன்னு குமிச்சுட்டு, எப்டிரா வெளில வரதுன்னு தெரியாம பேந்தப் பேந்த முழிச்சுண்டு இப்டி செருப்படி பட்டிண்டிருக்க மாட்டான். அவுனுக்கு மந்திரியா இருக்க வேண்டியவன், என் அதிர்ஷ்டம் நேக்கு மந்தியாக இருக்கே" என்று கபாலியை
மறு முறையும் பாகவதர் ஆரத் தழுவிக் கொண்டார்.
கபாலிக்கே இது கொஞ்சம் ஓவர் டிராமாவாகத் தோன்றியது. ஒரு முறை தழுவல் ஓக்கே. அது பாசம். அந்த ஓவர் வசனம் கூட ஓக்கே தான். காலத்தின் கட்டாயம். வாத்யார் நின்று கொண்டே விசர்ஜித்தால் மாணாக்கன் ஓடிக்கொண்டே ரிலீஸ் பண்ணுவான் என்கிறது தொற்காப்பியக் களஞ்சியம். அள்ளி அள்ளிப் பணம் கொடுத்தது, அதுவும் கடன்காரப் பார்ட்டிகள் கண்ணில் படும்படி வேண்டுமென்றே
செய்தது அதீத ராஜதந்திரம். அதற்குள் எட்டாம் நம்பர் கடை, நாயர் டீ ஸ்டால் போன்றவை மதியத்துக்கு மேல் கலெக்ஷானுகூலமாகக் கடையடைப்பு முஸ்தீபுகளில் இறங்க ஆரம்பித்திருந்ததை கபாலி கடைக் கண்ணால் கவனிக்கத் தவறவில்லை.
துட்டு கொடுத்த பிறகும் பாகவதர் இப்படித் துரத்தித் துரத்தி தனுஷ் மாதிரி 'மம்முத ராசா' என்று விடாமல் பேயாட்டக் கொஞ்சல் குதி போடுவதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டுமென அவன் யோசித்தான்.
"இப்ப இன்னான்ற நீயு? வேற எதுனா குன்சா மேட்டர் கீதா? எதாச்சியும் டகல்பாச்சி மேட்டரா? 'பட்டு'னு ஸொல்லு. முடிச்சிடறேன்" என்று தன்னை நசுக்கிக் கொண்டிருந்த பூதாகாரமான அந்த உருவத்தில் காதில் கபாலி திக்கித் திணறிச் சொன்னான்.
இரவோடிரவாக எதிரிகள், எதிர்த்துப் பேசியவர்கள், பேச நினைத்தவர்கள், என்றோ திட்டியவர்கள், எவ்வளவு எச்சரித்தும் சரியாகக் கப்பம் கட்டாதவர்கள் என்று எல்லோரையும் என்கௌண்டரில் போட்டுத் தாக்கி விட்டு வந்து எதிரே நின்று சல்யூட் அடிக்கும் போலீசைப் பார்த்து அகமகிழும் தலைவர் போல் பாகவதரும் உள்ளூர மகிழ்ந்தார்.
பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கினார்.
"'பட்டு'ன்னு நா சொல்லாமயே புரிஞ்சிக்கறயே அதாண்டா நீ கற்பூரக் கபாலி. அந்த வூட்டை இன்னும் கொஞ்ச நாளைக்கு உன் கஸ்டடிலயே வெச்சுக்கோ. அங்க ஒரு பூஜை பண்ணி சுப ஸ்வீகாரம் பண்ணிடறேன். அப்றம் எல்லார்க்கும் பகவான் விட்ட வழி, போடா"
அன்புப் பிடியிலும் கஷ்க நாற்றத்திலும் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த கபாலி அந்தப் 'போடா'வின் போது ரிலீசானான். 'பொடா' ஜாமீன் கேன்சலான கோபால் டிராஜெடி ஞாபகம் வரவே, முன்ஜாக்கிரதையாக இரண்டடி பின்னால் சென்று பவ்யமாக நின்றான்.
நதி மூலம், ரிஷி மூலமெல்லாம் பார்ப்பது கடினமென்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. கவனித்து, உன்னித்துக் கூட்டிக் கழித்து நுணுக்கிப் பார்த்தால் ஒசாமா இருக்குமிடம் முஷாரஃபின் மொட்டை மாடி என்பது கூட அங்கை நெல்லிக் கனியாகும்.
கையில் கணிசமான தொகை, கஸ்டடியில் வீடு, சுற்றி வர நண்பர்கள், வழிகாட்ட ஒரு வள்ளல்.
கபாலி சொன்னான். "குர்வே, நாம ஒரு தமில் படம் எடுக்கறம்"
ஆஸ்கர் வாங்கப் போகும் முதல் தமிழ்த் திரைப் படத்தின் ஜனன மூலம் அப்போது தான் நிகழ்ந்தது.
சமீபத்திய பின்னூட்டங்கள்