பிறந்தகப் பெருமை -5
‘மயிலாடுதுறை ஜங்ஷன்’
தலைப்பே, ஒரு சினிமாத் தலைப்பு போல அட்டகாசமாக இல்லை?
‘போண்டா, வடை, டீய்ய்ய், காப்பி’.
‘சார், குமுதம், விகடன், கலைமகள் …’ சின்னப் பையன்களின் வியாபாரக் கூச்சல்கள்.
‘டொய்ங் டொய்ங் டொய்ங்’ என்கிற இடைவிடா தண்டவாள மணிச் சத்தம்.
‘கார்டி’ன் அவ்வப்போதைய விசில்.
இடையிடையே ‘தி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் இன் ப்ளாட்பார்ம் நம்பர் ஒன்’, ‘சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாகச் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஐந்தாவது பிளாட்ஃபாரத்தில் …’ போன்ற அறிவிப்புகள்.
“போயி மறக்காம லெட்டர் போடுப்பா. பாட்டிய நான் பாத்துக்கறேன். ஒண்ணும் கவலைப்படாத”
“ஜன்னல் ஓரமா உக்காராதே. கண்ல கரி விழும். செயின் பத்திரம். காலம் கெட்டுக்கிடக்கு”
“எதுக்காக இப்பக் கண் கலங்கற? இதோ இருக்கற மெட்ராசுக்குத்தான போறேன். சீக்ரமா வந்து உன்னையும் அழைச்சிட்டுப் போறேன். கவ்லையே படாத. புள்ளைய ஜாக்ரதயாப் பாத்துக்க”
“ஜாதகம் பொருந்தி இருந்தா உடனே தந்தி குடுங்கோ. உடனே பொண்ணோட பொறப்பட்டு வந்துடறோம். ஏற்கனவே மாப்ளைக்கு லீவு இல்லைன்னு சொன்னேளே?”
எல்லாமே உணர்ச்சிக் குவியல்கள்.
‘ஜங்ஷன்’ என்கிற பெயருக்கு அவ்வளவு மகிமை!
மனசுக்குள் எத்தனை உருவகங்களை, பிம்பங்களை அந்தப் பெயர் உடனேயே தலை தூக்கச் செய்கிறது? குமுதம் நிறுவனத்தில் ‘ஜங்ஷன்’ என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனேயே நான் பெயர்ப் பொருத்தத்தின் புத்திசாலித்தனத்தை நினைத்துச் சிலிர்த்துப் போனேன்
மாயவரம் ஜங்ஷன் சுறுசுறுப்புக்குப் பெயர் போன இடம். முக்கால் வாசி நேரம் ஏதாவது நடந்துகொண்டே தான் இருக்கும். அவ்வப்போது லேசாகக் கொஞ்சம், இதமான நிழலில் பூனை கண் அயருமே, அதைப்போலக் கண் மூடுமே தவிர, குறட்டை எல்லாம் கிடையாது. அட, ஒன்றுமே நடக்காவிட்டாலும் கூட, சிங்கிள் எஞ்சின்கள் குறுக்கும் நெடுக்கும் போய், டிராக் மாற்றிக்கொண்டு, எல்லோரையும் உசுப்பி விடும். ஜங்ஷனும் உடனேயே தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து ‘டீய்ய்ய், காப்பி’ என்று அலற ஆரம்பித்து விடும்.
சென்னையிலிருந்து நான் மாயவரம் திரும்பும் போதெல்லாம், சிதம்பரம் தாண்டிய உடனேயே ஒரு உற்சாகம் திடீரென்று பற்றிக்கொண்டு விடும். கொள்ளிடம் கரை புரண்டு ஓடும். ஜன்னல் வழியே எட்டி எட்டிப் பார்ப்போம். சீர்காழி தாண்டியாயிற்றா? ஆஹா, ஜாலி. வைத்தீஸ்வரன் கோவில்? அதோ தெரிகிறதே? கன்னத்தில் போட்டுக் கொள். இன்னுமா ஜங்ஷன் வரவில்லை? ஏன் இப்படி லேட் பண்றான்? ஏதாவது ‘கிராசிங்’கிற்காக, வண்டியை ஒரு பத்து நிமிடங்கள் ‘அவுட்டரி’ல் போட்டு விட்டார்களென்றால் கோபம் கோபமாக வரும்.
மாயவரத்து மண்ணை மறுபடியும் மிதிப்பதற்கு அவ்வளவு அவசரம். பிளாட்ஃபாரத்தில் வண்டி நுழையும்போதே சொந்தக்காரர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள், வண்டிக்காரன் வந்திருக்கிறானா? அல்லது ஆட்டோவில் போய் விடலாமா?’ என்று பார்த்துப் பார்த்து மனசு அலை பாயும்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனின் ஒற்றை ரயில் ஒண்டுக் குடித்தன எளிமையைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு மயிலாடுதுறை ஜங்ஷனின் பல பிளாட்ஃபாரங்களும், கூட்ட நெரிசலும், பல்வேறு புகைவண்டிகளும் சிறு வயதில் கொஞ்சம் கலவரத்தைத்தான் ஏற்படுத்தும். ‘சோழனோ, சேரனோ, பாண்டியனோ எந்தப் படைவீட்டுடன், எப்படி முன்னேறி வருவார்கள், எங்கே ‘புஸ்’ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு எத்தனை நேரம் மட்டுமே நிற்பார்கள்?’ என்பதெல்லாம் திகிலான விஷயம்.
“இன்னிக்கி 110 அஞ்சுல வரான், மூணுல ரிப்பேர் வேலை நடக்குதுல்ல” என்று தீர்க்கதரிசிகள் யாராவது சொன்னால் அரை டிராயருடன் நாங்கள் அ
Chandrasekaran on July 16th, 2005
Ram,
You’ve brought the junction in front of my eyes. I feel the same, whenever I alight Trichy Junction. And, the nostalgia you get, when the train crosses Srirangam, is abundant…. Superb Article, Ram.