என் புத்தகங்கள்
ஹாலிவுட் அழைக்கிறது!
‘அமெரிக்காவின் கோடம்பாக்கம் குறித்த அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய நூல் இது. ஆங்கிலக் கனவுத் தொழிற்சாலையில் புழங்கும் பணம் முதல், கையாளப்படும் தொழில்நுட்பங்கள், மேற்கொள்ளப்படும் தொழில் நேர்த்தி வரை அனைத்து விவரங்களையும் தருகிறது.
‘ஹாலிவுட்’ என்பது என்ன? ஒரு ஊரா? பதினெட்டுப் பட்டிக்கு உட்பட்ட ஒரு பஞ்சாயத்தா? டவுனா? கலையும் கலைசார்ந்த மக்களுமா? அல்லது மாய வலையும் வலைசார்ந்த திமிங்கிலங்களுமா? காசும் கனவுகளும் கலர்க்குப்பைகளும் கலந்துகட்டிப் பெருக்கெடுத்துப் பாயும் காட்டாறா? ஃப்ளாஷ் புன்னகையும் ஃப்ளாஷ்பேக் சோகங்களும் நிறைந்த ஒரு ராட்சஸ கொடோனா?
திரைப்படத் தயாரிப்பு என்பதை ராணுவ ஒழுங்குடன் மேற்கொள்ளும் உலகம் ஹாலிவுட். பல கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, அதனைக் காட்டிலும் அதிகமான கோடிகளை அள்ளும் தொழிலில் உள்ள ரிஸ்க், அதனைச் சமாளிக்க ஹாலிவுட் சினிமாக்காரர்கள் கையாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திரைக்கதை அமைப்பில் அவர்கள் கொள்ளும் கவனம், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், தியேட்டர் சினிமா, வீடியோ சினிமா வாய்ப்புகள், நடிப்புக் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் என மிக நுணுக்கமாக ஹாலிவுட் திரையுலகம் குறித்த அத்தனை விவரங்களையும் தருவதோடு தமிழ் சினிமா தயாரிப்புக்கும் ஹாலிவுட் படத் தயாரிப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை மிகத்துல்லியமாக விவரிக்கிறது.
நூலாசிரியர் லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், அமெரிக்காவில் வசிப்பவர். Los Angeles Film School மாணவர்களுள் ஒருவர். சில தமிழ்ப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் பின்னணியில் இருந்திருக்கிறார்.
ராகம், தாளம், பொங்கலுடன் என் ஆர் ஐ எழுத்தாளரின் காமெடி காக்டெய்ல்!
டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்டிலும், ரசிகர்கள் செவிக்கு இசை ஈயக் காத்திருப்பார்கள் கலைஞர்கள். வாத்தியங்களை வாத்தியக் கலைஞர்கள் கொஞ்ச ஆரம்பிப்பார்கள். அதுவும் கொஞ்சலில் மயங்கி, தவழ ஆரம்பிக்கும். தவழ்ந்துதவழ்ந்து இறுதியில், அதற்கு சொக்கி மயங்கிக்கிடப்பவர்களின் மடியில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். அவர்களை தனது இசைக் கரங்களால் ஆரத்தழுவி, நடை பழக எத்தனிக்கும் குழந்தையைப் போல மடியிலிருந்து இறங்க அடம்பிடிக்கும். இசையும் நகைச்சுவையும் இணைந்து பிறந்த இரட்டையர். நகைச்சுவையை இசை குழைத்து வழங்கும் பக்குவம் சென்ற நூற்றாண்டில் இருந்து தொடர்ந்துவரும் பாரம்பரியம். ஆனந்தம் பரமானந்தம் என்றால் அது அதிகம் கிடைப்பது வெளியில் நடக்க கால்கள் இடறும் பனிக்காலத்தில்தான். பனி என்றால் அது டிசம்பர். டிசம்பர் என்றால் இசை. அந்த டிசம்பரில் நடக்கும் இசை தர்பாரைப் பற்றியதுதான் இந்நூல். அமெரிக்க வாழ் இந்தியரான நூலாசிரியர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் வருடந்தோறும் டிசம்பர் சீசனில் சென்னை வந்துசெல்லும் தனது அனுபவங்களை இந்நூல் வாயிலாக நகைச்சுவை தெறிக்கப் பதிவு செய்கிறார். இது இசை சீசனைப் பற்றி மட்டும் பேசாமல், அதையொட்டி நடக்கிற சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சிரிக்கசிரிக்க வாசகன் அருகேயே கொண்டுவந்து நிறுத்தி மகிழ்விக்கிற நூலாகவும் இருக்கிறது. கச்சேரிகளையொட்டி அரங்கத்தினுள் நிகழ்கிற சம்பவங்களைப் பற்றி வாசிக்கும்போது, அவற்றை கச்சேரியில் இருந்து நேரடியாகப் பார்ப்பது போன்ற பிரமை தோன்றுகிறது. பொங்கல், வடை, சாம்பாரின் சுவை முதல் அட்வான்ஸ்டு ராகங்களை அடையாளம் காண்பது வரை இசை கலா ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு தோழன்.
ப்ரிய ஸகி (மூன்றாம் பதிப்பு – அச்சில்)
கலக்கல் கபாலி (விரைவில்)



சமீபத்திய பின்னூட்டங்கள்